மழைத்துளி

சாலையில் செல்லும் பொழுது சட்டென்று ஒரு மழைத்துளி இமை மீது விழுந்தால், சில்லென்று ஒரு சிலிர்ப்பு தோன்றுமே! அப்படி தோன்றிய சிந்தனைச் சிதறல்களை பதித்து வைக்கும் இடம் இது!

Thursday, July 06, 2006

பைக் மீது ஒரு பட்டாம்பூச்சி !

நாம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென்று நடக்கும் சில நிகழ்ச்சிகள் நம் மனதில் நிறைந்து நீங்காமல் நிலைத்துவிடும் !

யோசித்து பார்த்தால், நாம் அந்த இடத்தில், அந்த நேரத்தில் மிகச் சரியாக இருந்தது ஒரு புதிராக, ஒரு புரியாத அதிசயமாகவே தோன்றும் !

அப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு ஒரு இனிய நிகழ்வு !
இன்ப அதிர்ச்சி ! Sweet Surprise !

வழக்கம் போல், வேலை முடித்து, சிறிது களைப்போடு, parkingல் இருந்த எனது பைக் தேடி சென்றேன் !

காதில் வழக்கம் போல் காதொலிப்பான் (earphone) ஊஞ்சலாட, அதில் 'மின்சாரம் என் மீது பாய்கிறதே' பாய்ந்து கொண்டிருந்தது Run திரைப்படத்திலிருந்து.

பைக் அருகே சென்றேன்! சென்றவன் அப்படியே நின்றேன்!
காரணம் என் பைக் மீது ஒரு பட்டாம்பூச்சி!



'அவர்' தீவிர யோசனையில் இருந்தார் !
தியானமா? நித்திரையா? புரியவில்லை எனக்கு !
சோகமா? சிந்தனையா? தெரியவில்லை எனக்கு !

கண்டிப்பாக 'அவரை' தொந்தரவு செய்யும் எண்ணம் இல்லை.

வீட்டுக்கு செல்ல வேண்டுமே என்றோர் எண்ணம். பட்டாம்பூச்சி பறந்து விடுமே என்ற கவலை மறுபுறம். இப்படி ஒரு சந்தர்ப்பம் இனி ஒரு முறை கிடைக்குமா? தெரியவில்லை. சட்டென்று ஒரு சிந்தனை. புதிய கைப்பேசியில் (cellphone) ஒளிப்பதிவு கருவி (camera) இருப்பது நினைவுக்கு வர, உடனே 'க்ளிக்' செய்தேன் இந்த தருணத்தை.

என்னை கடந்து சென்ற சக தொழிலாளி என்னை ஒரு முறை(த்து) பார்த்து விட்டு சென்றான். நான் கண்டுகொள்ளவில்லை. ஐந்தாறு snaps எடுத்து கொண்டேன்.

'அவர்' இன்னும் அசையாமல் இருக்க, அரை மனதோடு, மிக லேசாக இருக்கையைத் தட்டினேன். முதலில் சிலிர்த்து, பின்பு படபடவென சிறகடித்து எங்கோ பறந்து சென்றது அந்த பட்டாம்பூச்சி. முகத்தில் சிறிய புன்னகை.

மனதுக்குள் ஏதோ ஒன்றை அடைந்த சந்தோஷம். நமக்கும் மேல் ஏதோ ஒரு சக்தி உள்ளதை உறுதி செய்ய, எப்படியோ வந்து, மிக அருகில், தரிசனம் தந்து, எங்கோ சென்ற அந்த பட்டாம்பூச்சியை நினைத்தபடி,வண்டியைத் தட்டினேன் வீடு நோக்கி.

0 Comments:

Post a Comment

<< Home